உள்நாட்டு செய்தி
கைவிடப்பட்ட மகாவலி வலயங்கள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்
நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்
.இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் நேற்று (20) கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திசாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், 1994 ஒக்டோபர் 23 ஆம் திகதி காமினி திசாநாயக்கவுடன் தொடலங்க குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் தேசிய வீரர்கள், காமினி திசாநாயக்க மன்றத்தின் ஸ்தாபகர் மறைந்த சட்டத்தரணி ஸ்ரீமா திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.