உள்நாட்டு செய்தி
பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை..!
மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிப்பதற்காக விவசாய அமைச்சு மற்றும் மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த வியாழக்கிழமை வீடு வீடாக பிரசாரம் செய்யப்பட்டது.
சந்தையில் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் பற்றாக்குறை காரணமாக வெங்காயத்தின் சில்லறை விலை 800 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வெங்காயச் செய்கையைக் கைவிட்ட விவசாயிகளை மீண்டும் வெங்காயச் செய்கையைத் தொடர வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர் இந்த வேலைத்திட்டம், தம்புள்ளை சீகிரியா, கலேவெல மற்றும் நாவுல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், வெங்காயத்திற்கு நிலையான விலை கிடைக்காததால், உற்பத்திச் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளதால், உள்ளூர் பெரிய வெங்காயசெய்கையில் இருந்து விலகி இருப்பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையும் விவசாயத்தில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
உற்பத்தி செலவைக் குறைத்து விதை, உரம், களைக்கொல்லி ஆகியவற்றை நியாயமான விலையில் வழங்கினால், வெங்காயம் கிலோவுக்கு 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டால், உள்ளூர் வெங்காயத்தைப் பயிரிடத் தயாராக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.