உள்நாட்டு செய்தி
பெண் கொடூரமாக கொலை சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதி
கம்பஹாவில் இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர் இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சுகவீனத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்றுமுன்தினம் இரவு சீதுவ பகுதியில் அமைந்துள்ள தங்கும் அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் அனுராதபுரம், பமுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சீதுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், 22 வயதுடைய சந்தேகநபருடன் சில காலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சீதுவவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற 13ஆம் திகதி இரவு அறையில் இருந்த சந்தேகநபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இந்த கொலையின் பின்னர், சந்தேகநபர் தனது நண்பரிடம் தொலைபேசி மூலம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சந்தேகநபர் கொலையை செய்துவிட்டு உயிரை மாய்க்க திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.