உள்நாட்டு செய்தி
அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெற்றிடமாக உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்நாட்களில் நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவந்து தற்போது பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எமது அமைச்சும் நிறைய பங்களித்துள்ளது.
வெற்றிடமாகவுள்ள 2002 கிராம சேவைப் பிரிவுகளுக்கு கிராம சேவை உத்தியோகத்தர்களைப் பணியமர்த்த கடந்த 13 ஆம் திகதி முதல் இன்று 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதன்மூலம் அவசியமான கிராம சேவை உத்தியோகத்தர்களை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (14) பிரதியமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகத்தர்களின் தொழில்சார் சங்கங்களுடன் கலந்துரையாடினார்.
அங்கு பயணச் செலவுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவர்களின் முன்மொழிவை முன்வைத்தனர். அது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஏற்கனவே நாம் சமர்ப்பித்துள்ளோம்.
அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பிரதான பிரச்சினையான கிராம அதிகாரிகள் யாப்பு உருவாக்கப்பட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த பிரச்சினையில் விரைவில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.