உள்நாட்டு செய்தி
யாழில் கடத்தப்பட்ட தம்பதி : கணவர் கொலை !
வட்டுக்கோட்டை, பொன்னாலையில் தம்பதியினர் கடத்தப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதியை நேற்றிரவு(11) கடத்திச்சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கொண்ட சிலர் காரில் பின்தொடர்வதை அவதானித்த அவர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பி வேறு திசையில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பின்தொடர்ந்து காரில் வந்த சிலர் தம்பதியை மோட்டார் சைக்கிளுடன் கடத்திச் சென்று, பெண்ணை சித்தங்கேணியில் விட்டுச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட கணவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.