உள்நாட்டு செய்தி
இளம் யுவதி படுகொலை: முச்சக்கரவண்டி சாரதி வாக்குமூலம்
எல்பிட்டிய பிரதேசத்தில் யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் கண்டெடுத்திருந்தனர்.
கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதி கைது
கரந்தெனிய, தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்று (09) முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்றினால் பலவந்தமாக யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், யுவதி கடத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டி மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி கரந்தெனிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தலைமறைவு
தான் வாடகை அடிப்படையில் சென்றதாகவும், பின்னர் குறித்த நபரையும் யுவதியையும் நாணயக்கார மாவத்தைக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிறுமியின் மைத்துனர் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.