உள்நாட்டு செய்தி
மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வரி செலுத்த தவறியதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர்களில் ஒருவராக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் செயற்பட்டிருந்தார்.
அவருடன் மேலும் மூவர் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக செயற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ரூ.8,321,819.00 வரி செலுத்த தவறியதாக வற் (VAT) வரி அறவிடல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2010ஆம் ஆண்டு பெப்ரவரி , 2011ஆம் ஆண்டின் ஜூலை மற்றும் செப்டம்பர், 2012ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூனிற்கு இடைப்பட்ட காலத்தில் வரி செலுத்தாதது தொடர்பாக 2002இன் மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டம் எண். 14இன் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 2022ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நான்கு பணிப்பாளர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களை எதிர்வரும் ஏப்ரல் 02ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.