உள்நாட்டு செய்தி
ஜனவரி முதல் நீர் கட்டணம் தொடர்பில் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் – ஜீவன் தொண்டமான்
“நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு தற்போது மின்சாரமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தவருடம் இந்த முறைமையில் நிச்சயம் மாற்றம் வரும். மின்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நீர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வை நேற்று(14) “நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் எமக்கு மேலதிக செலவீனங்களையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஒகஸ்ட் மாதம் நீர் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி முதல் நீர் கட்டணம் தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும். வைத்தியசாலை, பாடசாலை, வணக்கஸ்தலங்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மீதும் சுமையை திணிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நிறுவனத்தை கொண்டுநடத்தக்கூடிய வகையில் சாதாரண விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும்.
செலவீனங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. ஆளணி பலம் மறுசீரமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு, நீர் வீண்விரயத்தை தடுத்தல், தனியார் துறையையும் இணைத்துக்கொள்ளல் போன்றன இவற்றில் பிரதானமானவை.
புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் நடவடிக்கை ஆரம்பமாகும். அத்துடன், சூரிய சக்தி பயன்பாட்டையும் 50 வீதம்வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் சுத்தமான – பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு பொருளாதார நெருக்கடியும் தடையாக உள்ளது. எனவே, நிதி திரட்டுவதற்கான மாற்று வழிகள் பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.