Connect with us

உள்நாட்டு செய்தி

சிறையில் அடைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட முஸ்லிம் கவிஞர் விடுதலை

Published

on

தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சமூகத்தின் மத்தியில் மன்னார்முது அஹ்னாப் என அழைக்கப்படும் அஹ்னாப் ஜசீமை விடுதலை செய்யும் உத்தரவு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொடவினால் டிசம்பர் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அஹ்னாப் ஜசீம் சட்டத்தால் குற்றவாளி இல்லையென அறிவிக்கப்பட்டாலும், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அரசு உத்தியோகபபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவர், மிகுந்த சிரமத்துடன் தன் வாழ்வாதாரத்தை பராமரிக்க வேண்டியுள்ளது.

2017இல் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பான நவரசத்தை எழுதியமை மற்றும் அவர் தனது மாணவர்களை ‘தீவிரவாத சித்தாந்தங்களை’ பின்பற்றும் நோக்கத்துடன் ‘தீவிரவாத’ விடயங்களை போதித்தார் என்ற குற்றச்சாட்டில், கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில் அவரது வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சர்வதேச மனித உரிமைகள் எதிர்ப்பையும் மீறி 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், அஹ்னாப் ஜசிம், ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட 2335/16 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபராக அவர் பெயரிடப்பட்டார்.

டிசம்பர் 12 அன்று, சட்டமா அதிபர் திணைக்களம் அஹ்னாப் ஜசிமுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க நான்கு மாணவர்களையும் ஒரு அதிபரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது, ஆனால் அவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை எனக் கூறி அஹ்னாப் ஜசிமை விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சட்டத்தரணி சஞ்சய் வில்சன் குணசேகர தலைமையிலான சட்டத்தரணிகள் குழு மன்றில் மன்னார்முது அஹ்னாப் சார்பாக முன்னிலையானது.

அஹ்னாப் ஜசிம் பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டபோது, ​​பல சர்வதேச அமைப்புகள் அவரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *