உள்நாட்டு செய்தி
பூசா சிறைச்சாலை சிசிடிவி சம்பவம் – ஐந்து அதிகாரிகள் இடைநிறுத்தம்
பூஸ்ஸ அதிகூடிய பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் பல சிசிடிவி கமராக்களை சேதப்படுத்தியதையடுத்து, கடமை தவறியதற்காக ஐந்து அதிகாரிகளை சிறைச்சாலைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இச்சம்பவத்தின் போது பூஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், சிறைக்காவலர் ஒருவர், சார்ஜன்ட் மற்றும் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள இந்த கைதி, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பூஸ்ஸ அதிகூடிய பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அண்மையில் மாற்றப்பட்டுள்ளார்.
நவம்பர் 25 ஆம் திகதி காலை உடற்பயிற்சிக்காக அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அறையின் சுவரில் ஏறி, பக்கவாட்டு கூரையின் பாதுகாப்பு கம்பி ஓரங்களில் ஊடுருவி 23 சிசிடிவி கமராக்களை சேதப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கைதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ரத்கம பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இந்த கைதி கட்டுக்கடங்காத நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கைதிக்கு எதிராக நீதிமன்ற வழக்கும் உள்ளது