Connect with us

உள்நாட்டு செய்தி

வடக்கு இளைஞனின் மரணம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் கூறிய கதைகள் குறித்து சந்தேகம்!

Published

on

தடுப்புக் காவலில் உயிரிழந்த தமிழ் இளைஞன் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட திகதிகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியியிட்டுள்ள அறிக்கையில் உள்ளடங்கியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சட்டத்தரணிகள் மற்றும் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் பிரபல அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர் இறந்த விதம் குறித்து பொலிஸார் வெளிப்படுத்தியுள்ள காரணங்கள், பிரேதப் பரிசோதனையின் போது அரச தடயவியல் அதிகாரி கண்டுபிடித்த காரணங்களுடன் முரண்பட்டு காணப்படுகிறன.

26 வயதான தமிழ் இளைஞன் நவம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அவரது தாயார் நவம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எவ்வாறாயினும், பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த குற்றத்துடன் தொடர்புடைய விசாரணைக்காக தாய் முறைப்பாடு செய்த தினத்திற்கு மறுநாள் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் அந்த இளைஞர்களை அவசியமேயின்றி கைது செய்ததாக அவர்களது சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

“இந்த குற்றச் செயல் தொடர்பாக, 11.11.2023 அன்று இரவு, வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாககன்னிப் பகுதியில், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 12.11.2023 அன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 21.11.2023 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நவம்பர் 21 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த இளைஞர் நவம்பர் 12ஆம் திகதி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

12ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பொலிஸார் இரு இளைஞர்களையும் சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக அவர்களது சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவிக்கின்றார்.

“இறந்த இளைஞரும் அவரது நண்பரும் காரணமின்றி கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதன் பிறகு இந்த விடயங்களை வெளியில் சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர்.  அதுமட்டுமின்றி, அந்த அச்சுறுத்தல்களாலும், சித்திரவதைகளாலும் அப்பாவி இளைஞனின் உயிரும் பறிக்கப்பட்டுள்ளது.”

நவம்பர் 21ஆம் திகதி அலெக்ஸுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை பிணையில் விடுவித்துக்கொண்ட சட்டத்தரணி சுகாஷ், குறித்த இளைஞர் சித்திரவதை செய்யப்படவில்லை என கடிதம் ஒன்றை தருமாறு பொலிஸார் இளைஞரின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகராசா அலெக்ஸ் எந்தவித உத்தியோகபூர்வ பதிவும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பொலிஸாரால் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளுக்கான குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் நவம்பர் 21ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளது.

நவம்பர் 11ஆம் திகதி நாகராசா அலெக்ஸ் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“ஆனால் அவர் வீட்டில் வைத்து 11 எட்டு (நவம்பர் 8) செய்யப்பட்டார் என அவரது வீட்டார் ஊடாக எங்களுக்குத் தெரியவந்தது, ஆனால் பொலிஸார் அவரை 11 ஆம் திகதி பதிவு செய்துள்ளனர். அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் அவர் நீதிமன்றத்தில் 12 ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டார்.” என குழுவின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து நீதவான் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அலெக்ஸ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கைதிகளின் உரிமைகள் குறித்த செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார்.

காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சந்தேகநபர்கள் இருவரும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முன்னர் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் 12ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த சந்தேகநபர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ‘திடீர் சுகவீனம்’ காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் திகதி வரை சிகிச்சை பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், பொலிஸ் அறிக்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திகதி குறிப்பிடப்படவில்லை.

19.11.2023 அன்று சந்தேகநபர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நவம்பர் 20ஆம் திகதி பிரேத பரிசோதனையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில், நாகராசா அலெக்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போது உயிரிழந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மரணத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழிவகுக்கும் இயற்கை நோய் எதுவும் கண்டறியப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டாலும், “உடலில் ஏற்பட்ட காயங்களால் சிறுநீரகச் செயற்பாடு தடைபட்டமை” மரணத்திற்கான காரணம் என பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்டுள்ள இடம் குறித்து பொலிஸார் எதுவும் கூறவில்லை. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தெளிவாக உள்ளது.

“உடல், கைகள் மற்றும் கால்களில் பல காயங்கள் (காயங்கள் மற்றும் கீறல்கள்) காணப்படுகின்றன” என பிரேத பரிசோதனையை நடத்திய தடயவியல் நோயியல் நிபுணர் வைத்தியர் ருத்ரபசுபதி மயோரதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

பொலிஸாரின் சித்திரவதையே மரணத்திற்கு காரணம் என நாகராசா அலெக்ஸின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

“சந்தேகநபர்கள் இருவரும் தலையை கீழே தொங்கவிட்டு, நான்கு நாட்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். பெற்றோல் ஊற்றப்பட்ட பைகளால் அலெக்ஸின் தலை சுற்றி கற்றப்பட்டுள்ளது. இந்த சித்திரவதைகளால்தான் அலெக்ஸ் கொல்லப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.” என உயிருடன் இருக்கும் இளைஞனுக்கு பிணை கிடைத்த பின்னர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வடக்கில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இறப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மயோரதன் மேலும் தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில், இந்த சந்தேகநபரின் திடீர் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் காங்கேசன்துறைப் பிரிவுக்குட்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாணப் பிரிவின் குற்றப் புலனாய்வுக் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் ஒரு குற்றத்தின் விசாரணையை பொலிஸாரிடமே வழங்குவது உண்மை மறைக்கப்படலாம் என உயிரிழந்த இளைஞரின் சட்டத்தரணி மற்றும் கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *