உள்நாட்டு செய்தி
தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி…!பிரதான சந்தேக நபர் கைது
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி போலி தொலைபேசி அழைப்புகள் மூலம்,பண மோசடி செய்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சிலர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு,உங்கள் குழந்தை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிகிச்சைக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வங்கிக்கணக்கு வைப்பிலிடுமாறும் தெரிவித்து,பணமோசடி செய்துள்ளதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்து.இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுதிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பமுனுகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், மோசடி மூலம் கிடைக்கப்பெறும் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக வெவ்வேறு வங்கிகளில் கணக்கிலக்கங்களை பேணி வந்துள்ளதாகவும்,இந்த சம்பவத்துடன் மற்றுமொருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் நேற்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை மறுதினம் (18) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஏதேனும் காரணத்தை முன் வைத்து இனந்தெரியாத நபர் இடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு பணம் வழங்குமாறு கோரினால்,பணம் வழங்கி இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ குறிப்பிட்டிருந்தார்.