உள்நாட்டு செய்தி
அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யும்,வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை…!
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகார சபை இன்று முதல் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.அவ்வாறு கைது செய்யப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முதல் அமுலாகும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும்.பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 350 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.