உள்நாட்டு செய்தி
பஸ், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை மீளாய்வு செய்வதில்லை என தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , பஸ் கட்டணத்தை திருத்த போதுமானதாக இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.பஸ் கட்டண திருத்த கொள்கையின் பிரகாரம் டீசல் விலையில் 4 வீதத்தால் திருத்தம் செய்யப்பட வேண்டுமென கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.ஒரு லீற்றர் டீசலின் விலை 2 வீதத்தால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எவ்வித திருத்தமும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக, நேற்று டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்திருந்தது. பஸ் கட்டணத்தை உடனடியாக 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.