உள்நாட்டு செய்தி
இரத்துச் செய்யப்பட்ட மற்றுமொரு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்: 200இற்கும் மேற்பட்டோர் அவதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, நேபாளத்தின் காத்மன்டுவுக்கு இன்று(01.10.2023) காலை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதில் பயணிக்கவிருந்த 200இற்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் வைத்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களுள் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியும் உள்ளடங்குகிறார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் UL-181 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை 08.20 மணிக்கு நேபாளத்தின் காத்மன்டுவுக்கு புறப்படவிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 07.15 மணிக்கு இராஜாங்க அமைச்சர் உட்பட 200இற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், இந்த விமானம் காலை 11.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவில்லை.
அதுவரை பயணிகளும் விமானத்தில் காத்திருந்தனர். பின்னர், குறித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில், நேபாளத்துக்கான இன்றைய விமான சேவை இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.