உள்நாட்டு செய்தி
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றனர்…!
2022 (2023) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (4) வெளியிடப்பட்டன.
இந்த வருடம் 263,933 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன்,
84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 166,938 பேரில் 149,487 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள், மீதமுள்ள 17,451 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள்.
இந்த வருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய 96,995 விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 (2023) பெறுபேறுகளின்படி, நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு-
உயிரியல் பாடத்தில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி முனசிங்க முதலிடத்தை பெற்றார்.
பௌதீக விஞ்ஞான பாடப்பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
வர்த்தக பிரிவில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த காவிதினி தில்சராணி தருஷிகா முதலிடம் பெற்றார்.
பொறியியல் தொழில்நுட்பத்தில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்ரியா முதலிடம் பெற்றார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவில் தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ருவினி அஹின்சா விக்ரமரத்ன முதலிடம் பெற்றார்.
முடிவுகள் வெளியான 24 மணி நேரத்திற்குள், அனைத்து பபாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் http://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு முடிவு தாளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
இந்த இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் அனைத்து பாடசாலை அதிபர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி,
பாடசாலை பரீட்சை முடிவு ஆவணங்களை பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட நகலைப் பெறலாம்.