உள்நாட்டு செய்தி
யாழில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர் கைது
வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் பத்திரம் போலியானது எனப் பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.அந்தவகையில் விசாரணையின் போது குறித்த நபர் ”சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாகவே போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கியவர்களின் தொடர்பு தனக்கு ஏற்பட்டதாகவும், அவர்கள் சாரதி அனுமதி பத்திரத்தைப் பெறுவதற்கு 50,000 ரூபாய் அறவிட்டார்கள் எனவும், தனது வீட்டிற்கு வாகனம் ஒன்றில் வந்து கைரேகைகளையும், பிற ஆவணங்களையும் பெற்றுச் சென்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து போலிசாரதி அனுமதி பத்திரங்களைப் பெற்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.