உள்நாட்டு செய்தி
கனடா விசா மோசடியில் ஈடுபட்ட 6 கைது
கனடாவிற்கு மாணவர் விசா வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரிகள், கடவத்தையில் விசா நடைமுறைக்கு போலி ஆவணங்களை வழங்கும் வர்த்தகத்தை நடத்தி வரும் கட்டிடமொன்றை நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.3 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், 3 மடிக்கணினிகள், 4 பிரிண்டர்கள், 1 ஸ்கேனர்கள், பல நிதி அறிக்கைகள், வங்கிக் கடவுச்சீட்டுகள், போலி ஆவணங்கள், உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் பணமாக 1, 187,130 ரூபாவையும் கைப்பற்றியுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடைய ஐந்து பெண்களும் அடங்குவர்.வெளிநாட்டு வீசாக்களை நாடும் நபர்களுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் சொத்துப் பிரகடனங்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களை இந்தக் குழு உருவாக்கியுள்ளது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்