Connect with us

உள்நாட்டு செய்தி

“ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க மாற்று வழி இருக்குமாயின் அதனை முன்வைக்க வேண்டும்” – மனோவுக்கு செந்தில் பதில்

Published

on

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று (28) இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

அவரின் அந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மனோ கணேசனின் கருத்து பிற்போக்குத் தனமானது என விமர்சித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது…

“நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவை அனைத்து நிறைவேற்றப்படவில்லை. அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியேறியதா? என்பதைக் கேட்கவிரும்புகிறேன். தற்போது ஆயிரம் ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பெரும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தில் தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே அங்கம் வகிக்கிறது. இதன்போது மக்களன் குறைகளையும், தேவைகளையும் அரசாங்கத்திடம் நேடியாக எடுத்துச் சென்று அவற்றைப் பூர்த்தி செய்யும் பொறுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை அரசாங்கத்தை விட்டு வெளியேறச் சொல்வது பொறுப்பான அரசியல்வாதி கூறும் பதிலாக இருக்காது.

எதிர்க் கட்சியில் இருப்பதைவிட ஆளும் கட்சியில் இருந்தால் மட்டுமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள கௌரவ மனோ கணேசனுக்கு புரியும். தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூற முடியாது. அமைச்சரவையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சம்பள நிர்ணய சபைக்கு இதனை எடுத்துச் செல்ல அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சருடன் 20 இற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கவில்லை எனில், முற்போக்குக் கூட்டணித் தலைவர் கௌரவ மனோ கணேசனின் கருத்து குறித்து சிந்திக்கக் கூடியதாக இருக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் நாளை தங்களால் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க மாற்று வழி இருக்குமாயின் அதனை முன்வைக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் இருந்து இதனை செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியில் இருந்து எதனையும் செய்துவிட முடியாது. எனவே, ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுக்க பக்க பலமாக இருக்க வேண்டுமே தவிர அதனைப் பலவீனப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் செந்தல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.