உள்நாட்டு செய்தி
20 மில்லியன் ரூபா செலவில் நான்கு பிரிவுகளில் சம்மாந்துறையில் வைத்தியர் விடுதி
உலக வங்கியினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் வைத்திய உத்தியோர்களுக்கான தங்குமிட கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் இக்கட்டிடத்திற்கான கல் நடு விழா 22ஆம் திகதி நடைபெற்றது
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆசாத் எம் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
அத்துடன், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ.ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹீர், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களப் பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஹக்கீம் உள்ளிட்ட முக்கிய அதிதிகளும் கட்டிட அடிக்கல் நடு விழாவில் பங்குபற்றினர்.
குறித்த கட்டிடத்தினை மூன்று மாத காலத்திற்குள் முடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் ஒப்பந்தக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார்
குறித்த கட்டிடம் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருகின்ற வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களின் தங்குமிட தேவையை ஓரளவு நிவர்த்திக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிகழ்வின் இறுதியாக விடுதிகளுக்கு சமூகமளித்த குறித்த குழுவினர் உத்தியோகத்தர்களிடம் குறைநிறைகளைக்கேட்டறிந்து கொண்டதுடன், குறைகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தனர்