Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் 16 நாட்களுக்கு மது அருந்தத் தடை ! 

Published

on

ருஹுணு மகா கதிர்காமம் கோயிலின் வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு இன்று முதல் 16 நாட்களுக்கு இப்பகுதியை மதுவிலக்கு வலயமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இப்பெரஹராவை முன்னிட்டு இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்று கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜூன் 19 திங்கட்கிழமை தொடக்கம் ஜூலை 4 செவ்வாய்கிழமை வரையான காலப்பகுதியில் ஊவா மாகாண பிரிவுகள், நிலையங்கள் மற்றும் அலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறும் மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் கலால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.எனவே கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள், மதுபானசாலைகள், ஆகியவற்றில் குறிப்பிட்ட காலப்பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.கதிர்காமம் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் யாத்ரீகர்கள் சிவில் குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.புனித நகரம் மற்றும் எசல திருவிழா வலயத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மதுபானங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் கலால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் பற்றிய புகார்கள், தகவல்களை 1913 எனும் திணைக்களத்தின் ஹொட் லைன் இயக்கத்தின் மூலம் அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.