உள்நாட்டு செய்தி
12 புதிய மருந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்க தீர்மானம்
நாட்டின் மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயர்த்த முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனை அடைவதற்காக 12 புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் முதலீடுகள் வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தனியார் துறையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனர்களில் ஒன்றான “நவலோக மெடிகேர் (தனியார்) நிறுவனம்” என்ற பெயரில் நீர்கொழும்பில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனை கட்டிடத்தை சிகிச்சை சேவைகளுக்காக அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது இந்த நாட்டில் மருந்து உற்பத்தி 14 வீதத்திற்கும் 15 வீதத்திற்கும் இடையில் உள்ளதாகவும், அதனை அதிகரிப்பது இலகுவான விடயம் அல்ல எனவும், ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் அமைச்சுக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது அதிக முதலீடாக இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான முதலீடு இலாபகரமானதாக அமையாது என எதிர்பார்க்கப்பட்டாலும் சவால்களை சமாளிப்பது இலகுவானதல்ல எனவும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.