உள்நாட்டு செய்தி
நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரிக்கும்
சமூகத்தின் சொத்தாகவும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டிய முதியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 3 மில்லிய்யனை அண்மிக்கலாம் என நம்பப்படுவதாக சிறுவர், மகளிர் அலுவலகம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அஸ்லின் தெரிவித்தார்.
கொழும்பில் அண்மையில் மெதடிஸ்ட் திருச்சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
முதியோர்களுக்கான தேசிய செயலகமானது, 2000ஆம் ஆண்டு 9ஆம் இலக்க முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனமாகும்.
முக்கியமாக இலங்கையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நலன்கள், வலுவூட்டல், சமூக பாதுகாப்பு தொடர்பில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரச நிறுவனமான தமது நிறுவனம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் 468 முதியவர்கள் 100 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதாகத் தெரிவித்த அவர், 6000 குடும்ப மாத வருமானம் பெரும் குடும்பங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே 2,000 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றார்.
இதேவேளை 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எவ்வித கட்டுபாடுகளுமின்றி 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி, சனத்தொகை அதிகரிப்பு காரணமாக 2000 ஆம் ஆண்டின் ஆய்வுக்கமைய தெற்காசிய வலய நாடுகளில் உலகில் 2.5 மில்லியன் முதியவர்கள் இலங்கையில் இருப்பதாகவும் இத்தொகையானது,2023இல் 3 மில்லியனாக அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலங்கையில் மாதாந்தம் சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கப்படும் 2000 ரூபாயில் தேசிய நிதி சமூகநலன்புரி திட்டத்துக்காக 100 ரூபாய் கழிக்கப்படுவதாகவும் இந்த தொகையில் முதியவர்களுக்கான பல்வேறு ரீதியிலான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றது என்றார்.
அத்துடன் முதியவர்களின் தனிமையுணர்வதைத் தவிர்ப்பதற்கு முதியோர் பராமரிப்பு மத்தியநிலையங்களில் பொழுது போக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகத்துக்கும் கீழ் ஆரோக்யா மருத்துவ காப்புறுதித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இதன்கீழ் கீழ் குறிப்பிட்ட பிரதேச செயலகங்களின் கீழ், நோய்களால் பாதிக்கப்பட்ட 5 முதியவர்களுக்கு 25,000 கொடுப்பனவு வழங்கப்படுவதுடன்,வீடுகளில் குறைந்த வசதிகளுடைய முதியவர்களுக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
இதேவேளை 346 முதியோர் இல்லங்கள் நாடுமுழுவதும் இருப்பதுடன், இதில் 6 முதியோர் இல்லங்கள் அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இவற்றில் 7,000 முதியவர்கள் தங்கியிருப்பதாகவும் இவை கதிர்காமம், கைதடி, சாலியபுர,பன்னல, மாளிகாதென்ன, நிட்டம்புவ ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றுக்கான பராமரிப்பு நிதியை முதியோர்களுக்கான தேசிய செயலகம் வழங்கி வருகின்றது என்றார்