உள்நாட்டு செய்தி
சாரதி பற்றாக்குறையால் 24 ரயில் பயணங்கள் இரத்து

சாரதி பற்றாக்குறை காரணமாக 24 பிராந்திய புகையிரதப் பயணங்கள் இன்று (06) இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.சரக்கு ரயில்கள் மற்றும் நாவலப்பிட்டி, மாத்தளை, கண்டி, மஹவ, மட்டக்களப்பு போன்ற பல பிராந்திய ரயில்களும் இரத்து செய்யப்பட்ட சேவைகளில் அடங்கும்.அரச ஊழியர்களுக்கு 60 வயதிலிருந்து ஓய்வு அளிக்கும் கொள்கை முடிவு காரணமாக சுமார் 46 ரயில் சாரதிகள் அண்மைக் காலத்தில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதுடன், ரயில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இப்பிரச்சினைக்குத் தீர்வாக 27 புகையிரத சாரதிகள், 9 சாரதி உதவியாளர்கள் மற்றும் 23 புகையிரத கட்டுப்பாட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், நிலைமையை சமாளிக்கும் வகையில், அலுவலக ரயில்களை நாளை (07) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.கொழும்பு மற்றும் மட்டக்களப்பு புகையிரத சேவைகள் எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழமைக்குத் திரும்பும் எனவும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் சாரதியின்மை காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை இயங்கும் உதயதேவி புகையிரதம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.