Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய மட்ட எதிர்ப்பு நாளாக பெப். 22ஆம் திகதி பிரகடனம்; பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு !

Published

on

வரி அதிகரிப்பு, மருந்து தட்டுப்பாடு, மின்கட்டண அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் எதிர்வரும் 22ஆம் திகதி தேசியமட்டத்தில் தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன தீர்மானித்துள்ளன.

கொழும்பு மற்றும் நாட்டின் பிரதான 10 பிரதேசங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது. தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் என்பன இணைந்த ஏற்பாடு செய்துள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொள்வார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

அதற்கமைய, நாளைய தினம் (20ஆம் திகதி) தேசிய மக்கள் கூட்டமொன்றை நடத்தவும், 22ஆம் திகதி தேசிய மட்டத்திலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மருத்துவ பீட விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை வங்கி சேவை சங்கம், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

வரிச் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பானது நியாமற்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை திருத்தியமைக்க வேண்டியது அவசியமாகும். கடந்த 08 ஆம் திகதி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து அரசாங்கத்துக்கு எங்களின் பிரச்சினையை வெளிப்படுத்தியிருந்த போதிலும் இதுவரையில், அரசாங்கத்தின் சார்பில் எந்தவொரு தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே, இதற்கு முன்னர் அறிவித்ததன்படியே மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 17ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருந்தது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ பீட விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சாமர பன்ஹேக, இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்