Connect with us

உலகம்

இந்தியாவில் கொவிட் தடுப்பூசி பாவனையில்

Published

on

இந்தியாவில் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 10.30 க்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பிறகு அவர் டெல்லி மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் உரையாடினார்.

அதன் பின்னர் மோடி நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக உரையாற்றினார்.

“மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல. இந்தியாவில் குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. தடுப்பூசியை கண்டுபிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள். நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இராணுவ வீரர்களுக்கும், பொலிஸாருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 2-3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், இரண்டாவது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும். தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது” என்றார்.

தமிழகத்தில் 166 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டமை குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக 5 இலட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் கோவிஸ்லட் தடுப்பூசியும், 20 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கோவேக்சின் தடுப்பூசியை 6 மையங்களில் பயன்படுத்தினார்கள்.

தமிழகத்தில் 4.39 இலட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 2.5 இலட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு இரண்டாவது தடுப்பூசி 28 நாட்கள் கழித்து மீண்டும் போடப்படும்.

மார்ச் மாதத்துக்கு பிறகு தனியார் நிறுவனங்களுக்கும் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.