உள்நாட்டு செய்தி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, சம்பள உயர்விற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை எனவும் முதலாளிமார் சம்மேளனத்தின் கலந்துரையாடலில் திருப்தி இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1105 ரூபாவை பெறுவதற்கான இறுதி முன்மொழிவை இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் சமர்ப்பித்துள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தமது இறுதியான முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டதாக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலையான வருமான முறைமையொன்றை வழங்கும் இலக்குடன் இந்த முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டதாக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகளில், ஒவ்வொரு தோட்டத் தொழிலாளருக்கும் நிலையான எதிர்காலத்தை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சம்மேளனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமானதாக இருப்பதை இந்த புதிய முன்மொழிவு உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழில்துறையின் நிதியியல் உறுதிப்பாட்டை பேண அனைத்து பங்குதாரர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனத்தின் முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.