Connect with us

அரசியல்

சுயாதீன பொது மக்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

Published

on

அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30) பாராளுமன்றத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால.த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத அங்கத்தவர்களான கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுல விஜேசுந்தர, கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹஷீம் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றைய தினம் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனியவின் ஓய்வையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி கே.பி.பெனாண்டோவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை கவனத்தில் எடுத்துக் கொண்டது. இந்தப் பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி என்.பி.பீ.டி.எஸ் கருணாரத்ன அவர்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிப்பதற்கும், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்காரை மேன்றையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளுக்கும் அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை 2023ஆம் திகதி பெப்ரவரி 01ஆம் திகதி பிரசுரிப்பதற்கு அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்துள்ளது. விண்ணப்பம் குறித்த மாதிரிப் படிவம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023 பெப்ரவரி 15ஆம் திகதியாகும்.