உள்நாட்டு செய்தி
“கூட்டமைப்பு வீண்பழி சுமத்தியது”

கூட்டமைப்பு தன்மீது பரராஜசிங்கம் விவகாரத்தில் வீண்பழியைச் சுமத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்…
“கடந்த 2015ஆம் ஆண்டு நூறு வீதம் தங்களோடு வந்தவர்களுக்கு வழங்கிய பரிசாக என்னை சிறையில் அடைத்தார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகிய எனக்கும் எனது கட்சிக்கும் இப்பொழுது வழி பிறந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான் 1561 நாட்கள் சிறையில் வாடினேன். சொல்லமுடியாத துன்பங்கள் சிறைச்சாலையிலே இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க மைத்திரிபால சிறிசேன அவர்களது கையொப்பத்தை இட்டதன் காரணமாக நான் சிறையில் வாடினேன். என்னை வரலாறு விடுதலை செய்யும் என்று கூறினேன். அது இன்று நடந்து இருக்கின்றது. யோசப் பரராஜசிங்கம் என்பவரை நான் கண்டதும் இல்லை ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து நீதித்துறையும் எங்களுடைய நல்லெண்ணமும் ஜெயித்தது. எனது பயணம் மக்களுக்காக தொடரும்'”என தெரிவித்தார்.