உள்நாட்டு செய்தி
தபாலில் வந்த குஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றல்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுங்க மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பொம்மைகள் அமெரிக்காவில் இருந்து இந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போதைப்பொருட்களின் பெறுமதி தோராயமாக 02 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், குறித்த பொதியை நேற்று (24ம் திகதி) பரிசோதித்து சந்தேகநபர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.