உள்நாட்டு செய்தி
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி
உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும் உள்ளம் ஆகியவற்றின் கலவையாகும். ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் அல்ல. அது சேவைக்கு அப்பாற்பட்ட ஒரு பொறுப்பாகும். அதனால்தான் ஆசிரியர், சமுதாயத்தில் உயர்வாகக் கருதப்படுகிறார் . இப்படிப்பட்ட பெருமைக்குரிய பணியை ஆற்றிவரும் ஆசிரியரை போற்றும் வகையில் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம்.
அரசாங்கம் என்ற வகையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணிக்கான எமது பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம். கல்வி அமைச்சராக நான் பணியாற்றியபோது ஆசிரியர் பணியின் கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டேன். அரசியல் அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தை இடைநிறுத்தவும், கல்வியியல் கல்லூரி முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூறுகின்றேன்.
ஆசிரியர்களுக்கு நவீன உலகத்துடன் இணைவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நான் அவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பதற்கான விசேட பயிற்சியை ஏற்பாடு செய்தேன்.
மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிடும் இவ்வேளையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்கள், தங்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் உயர்வான ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.