உள்நாட்டு செய்தி
ஜனவரி 05 இல் கூடுகின்றது பாராளுமன்றம், சபாநாயகர் சுய தனிமைப்படுத்தலில்?
2021 ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செய்தியை அறிக்கையிடுவதற்கு மீண்டும் ஊடகவியலாளர்கள்கு அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
விசேட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது.
ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபாநாயகர் சுய தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அருண ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய (30) கட்சித் தலைவர்கள் கூட்டமும் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.