உள்நாட்டு செய்தி
“சர்வதேச விசாரனை வேண்டும்”

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் இன்று (30) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரனை அவசியம் எனவும் ஆர்பாட்டகாரர்கள் கோரியுள்ளனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா…
“நாங்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டு பிடிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இதுவரை ஒரு தீர்வுமே கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக எமது போராட்டங்களை நாங்கள் கைவிட்டு இருக்கப்போவதும் இல்லை. நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை. ஆகவே சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம். எதிர்வரும் வருடம் 2 ஆம் மாதம் ஜெனிவா பேச்சுவாத்தை இடம் பெற உள்ளது. இதில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது. மூன்று தடவைகள் கால அவகாசம் வழங்கியும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (ஓ.எம்.பி) கொண்டு வந்தனர். ஆனால் அதன் ஊடாக ஒன்றுமே நடைபெறவில்லை” என்றார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது