Connect with us

உள்நாட்டு செய்தி

நான் பிறக்கும் போது இலங்கை எவருக்கும் கடனில்லை – ஜனாதிபதி

Published

on

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி, இலங்கை வரலாற்றில் இது முக்கியமான படிக்கல்லாகுமெனத் தெரிவித்தார்.

“வீழ்ச்சியில் இருந்து மீள்வது, கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் பெறுவது மட்டுமன்றி, சமூக துறைகளைப் பாதுகாப்பது, வாழ்க்கை முறையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது என்பன முக்கியமாகும். அதனைவிட தற்போதைய நிலைமையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் முக்கியமானதாகும்.

சமூகக் கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாத்தல் என்பவற்றை முன்னெடுக்கும் அதேநேரம் போட்டித் தன்மை மிகுந்த ஏற்றுமதியை அடிப்டையாகக்கொண்ட தொழில் துறையாக நாட்டை மேம்படுத்துவதை புதிய பொருளாதார யுகமாக கருதுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“இதன் ஆரம்பம் கடிமானதாக இருக்கும், ஆனால் நாம் அதனையே பின்தொடர்ந்தால் எம்மால் இன்னும் முன்னேற முடியும். இப்போதைக்கு எது தேவையோ அதுவே எமது அர்ப்பணிப்பாக இருத்தல் வேண்டும். எனினும் இங்கு நாம் எமது இலக்கை அடைவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும்”, என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நம்மை நாம் மாற்றிக்கொள்வோம், இது நமது சமூக சேவைகளை நிலைநிறுத்துவதை எளிதாக்கும்” என்றும் கூறினார். இலங்கை தனது கடன்களைக் குறைப்பதற்கும், முடிந்தால் கடன்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிகளை 48 மாத காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள ஏற்படுத்துதல், கடன் நிலைத்தன்மையை மறுசீரமைத்தல்,  நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதுகாத்தல், ஊழலை ஒழிப்பதற்கு தேவையான கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி நகர்வதன் மூலம் இலங்கையை முன்னேற்றுதல் என்பன  இந்த கடன் வசதியின் நோக்கமாகும்.