உள்நாட்டு செய்தி
மவுசாக்கலை நீர்த்தேகத்தில் வெளிப்படும் சிலைகள்
நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தும் மலையகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களின் ஒன்றான மவுசாக்கலை நீர்த்தேகத்தில் நேற்று (21) திகதிக்கு சுமார் 55 சதவீதம் வரை நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 45.4 சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறங்கியதன் காரணமாக நீரில் மூழ்கி கிடந்த கதிரேசன் ஆலயம், விகாரை, புத்தர்சிலை , பள்ளிவாசல் மஸ்கெலியா பழைய நகரம் உள்ளிட்ட பல கட்டடங்கள் மற்றும் பாலங்கள் வீதிகள் ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெயில் உடனான காலநிலை நிலவி வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களுக்கு கடந்த ஒரு சில மாத காலமாக மழை பெய்யாததனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளன.
காசல்ரி நீர்த்தேக்கத்தில் 78 சதவீத நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 22 சதவீதம் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 55 சதவீதம் குறைந்துள்ளதாகம் தற்போது குறித்த நீர்த்தேக்கத்தில் 45.6 சதவீத நீர் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்;.
நாட்டில் தற்போது எரிபொருள் போதியளவு கிடைக்காததன் காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதனால் நீர் மின் உற்பத்தி மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்தும் வரட்சியான காலநிலை ஏற்படுவதனால் குறித்த நீர் குடிநீருக்கும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவே பொது மக்கள் நீரினை கவனமாக பயன்படுத்துமாறும் நீரூற்றுக்களை பாதுகாக்குமாறு மின்சார சபை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.