Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து கவனம்

Published

on

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துருக்கி வௌிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.

வர்த்தக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பல்வேறு உற்பத்திகளுக்கு துருக்கி சந்தைகளில் பரந்தளவிலான வாய்ப்பு கிடைக்கும் என துருக்கி வௌிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தமது நாட்டு முயற்சியாளர்களை தௌிவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் துருக்கி ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்த, அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர், துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு கடந்த வருடத்தில் விடுத்த அழைப்பை மீண்டும் நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் COVID தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக துருக்கி வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பில், துருக்கி வௌிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து, துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழு இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.