உள்நாட்டு செய்தி
ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.
எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு …
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடன் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அவர்கள் இந்த தீர்மானங்களை மேற்கொண்டார்.
01. தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்
02. நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்
03. இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு iii இலிருந்து வகுப்பு iiக்கு பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு ii இலிருந்து வகுப்பு iக்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல்
04. ரூ .20,000 வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்
05. தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் (30 மணிநேரம்) நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்
ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார்.
ரூ .10,000 கொடுப்பனவு மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க, ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.
அதன்படி, அரச சேவை தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
அரச சுகாதாரத் துறை மீது அரசாங்கத்துக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் தாதியர் சேவைக்கு கூடிய அங்கீகாரத்தை அளிப்பதாகவும், தாதித் தொழில் வல்லுநர்களுக்கு உரிய இடத்தை வழங்குவதாகவும், ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன ஆகியோரும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு