உள்நாட்டு செய்தி
கொழும்பு றோயல் கல்லுாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு
கொழும்பு றோயல் கல்லூரியில் மாணவர் தலைமைத்துவ பேரவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நியமனங்களைத் திருத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு, மாணவத் தலைவர் நியமனங்கள் மூலம் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக றோயல் கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த 7 முறைப்பாடுகளை அடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய குறித்த முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளார்.
அதற்கமைய, முதற்கட்ட விசாரணையின் முடிவில், தவறான நியமனங்களைத் திருத்துமாறும், மாணவர்கள் குழுவின் முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வை எட்டுமாறும் ஆணைக்குழு பணித்துள்ளது.
மாணவர் பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது பல்வேறு அளவுகோல்கள் பின்பற்றல், கல்வியில் சிறந்து விளங்குதல், கல்வி சாராத செயற்பாடுகள், பள்ளியின் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் சங்கங்களில் பங்கேற்பது மற்றும் பள்ளி வருகை ஆகியவை ஆணைக்குழுவின் ஏனைய உத்தரவுகளில் அடங்கும்.
அத்துடன், றோயல் கல்லூரி மீதான விசாரணை மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது