உள்நாட்டு செய்தி
கடந்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன : பாராளுமன்றக் குழு வெளிப்படுத்துகிறது
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள்செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார்.
இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து, நிலுவையில் உள்ள பில் தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு, அந்தந்த அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
மேலும் கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்