உள்நாட்டு செய்தி
2025 முதல் கொவிட்க்கு முந்தைய அட்டவணையே தேசிய பரீட்சைகளில் பின்பற்றப்படும் – சுசில் பிரேமஜயந்த
அடுத்த ஆண்டு முதல் கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அனைத்து தேசிய பரீட்சைகளையும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தும் நோக்கில் பரீட்சை நாட்காட்டியை நெறிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து தேசிய பரீட்சைகளும் 2025 முதல் வழக்கமான அட்டவணைப்படி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக, அனைத்து தேசிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன, எனவே அந்த சூழ்நிலையானது பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட வழக்கமான பரீட்சை அட்டவணைகளை புறக்கணிக்க வழிவகுத்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு முதல் அனைத்து தேசிய பரீட்சைகளையும் மீண்டும் குறித்த நடைமுறையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை பெப்ரவரி முதலாம் திகதியுடன் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வினாத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தாம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் கடந்த வருட வினாத்தாள் மதிப்பீட்டுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவையே வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.