உள்நாட்டு செய்தி
திருகோணமலையில் 11 இளைஞர்கள் கைது
திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பத்துப்பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பிற்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேரும், கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் 1000 மில்லி லீட்டர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும் பதவி ஸ்ரீபுர பகுதியில் 750 மில்லி லீட்டர் கசிப்பு வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பதவிஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் உள்ள பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும், தெரிவித்துள்ளனர்.