உள்நாட்டு செய்தி
ரஷ்ய பிரஜை மீது தாக்குதல் 38 இலட்சம் கொள்ளை
ஹபராதுவ, தல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்குள் ரஷ்ய பிரஜையொருவரைத் தாக்கி காயப்படுத்தி பணத்தை கொள்ளையடித்தனர் எனக் கூறப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் நால்வரை கைதுசெய்வதற்கு ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், 39 வயதுடைய ரஷ்ய பிரஜை காயங்களுடன் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என்று ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ரஷ்ய பிரஜைகள் நால்வரும் தேடப்பட்டு வருவதுடன், ரஷ்ய ரூபிளை இலங்கை ரூபாவுக்கு மாற்றிக்கொண்டிருந்த ரஷ்யப் பிரஜையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பண பறிமாற்றத்தின்போது இடம்பெற்றது என்று கூறப்படும் முரண்பாடு வலுப்பெற்றதைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தன்னைத் தாக்கிய ரஷ்ய பிரஜைகள் தன்னிடமிருந்த 38 இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்தனர் என்று பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.