Connect with us

உள்நாட்டு செய்தி

சில விடயங்களை கையை முறுக்கி தான் கேட்க வேண்டும்- ஜீவன்

Published

on

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தினை விட்டு வெளியில் வருமாறும், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் சிலர் கூறுவதாகவும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசாங்கங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்காக பேசிய ஒரே அரசாங்கம் இந்த அரசாங்கம். அப்படியாயின் அந்த அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்து என்ன செய்வது. அதே கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியில் வந்தால் தொழிலாளர்களின் நலன் தொடர்பான விடயங்களை யார் பொறுப்பேற்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று (02) அக்கரபத்தனை மன்ராசி பகுதியில் இரவு மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சத்திவேல், முன்னாள் நுவரெலியா பிரதேசசபை தலைவர் சச்சிதாநந்தம், அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்தினை விட்டு வெளியே வந்து இவர்கள் என்ன ஆணியை பிடுங்க சொல்கிறார்கள் அரசாங்கத்தை விட்டு வெளியே வந்தால் இருக்க நாதியும் இல்லமல் போகும். இன்றுள்ள நிலைமையினை பாருங்கள் தொழிலாளர்களின் ஒற்றுமையினை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துள்ளார்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் இதான் நிலைமை ஆனால் இந்த அரசாங்கம் முயற்சி செய்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது.

கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் இந்த அரசாங்கம் உங்களை பற்றிதான் பேசியிருக்கிறது உங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள வழங்குவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால் அரசாங்கத்தை தான் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

இ.தொ.கா ஒரு போராட்டத்தினை கையில் எடுத்தால் வெறுமனே மல்லிகைப்பூ சந்தியில் பதாதைகளை காட்சி படுத்திவிட்டு மட்டும் செல்லாது அது முழு போராட்டமாக தான் முன்னெடுக்கும். ஆகவே தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு சிலர் கூறுகிறார்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டத்தினை மாற்ற வேண்டும் என்று எனக்கு அது தான் புரியவில்லை. அரசாங்கம் ஆயிரம் தர வேண்டும் சொல்கிறது என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்கிறது இந்நிலை அரசாங்த்திற்கு எதிராக போராட சொல்கிறார்கள் நாங்கள் அவ்வாறு செய்தால் நாளை இவர்கள் கூறுவார்கள் அரசாங்கம் கைகழுவி விட்டுவிட்டது என்று நான் உங்களை வீதியில் இறங்கி போராட சொல்லவில்லை பதாதைகளை காட்சிப்படுத்த சொல்லவில்லை.

வருகிற ஐந்தாம் திகதி அவரவர் வீட்டில் அமைதியாக இருந்தால் போதும் கட்டாயம் நினைத்ததை சாதிக்க முடியும்.இதில் ஒரு சிலர் கேட்கிறார்கள் ஐந்தாம் திகதி வேலை நிறுத்தம் செய்தால் ஆயிரம் ரூபா கிடைக்குமா? கிடைக்காது என்று சொல்ல முடியுமா? எதை எடுத்தாலும் முடியாது இயலாது என்று தான் கூறுகிறார்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வர சொல்கிறார்கள் கூட்டு ஒப்பந்தத்தினை உருவாக்கியது இ.தொ.கா. அல்ல உங்களது முன்னோர்கள்.

என்னென்ன சரத்துக்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு பன்னியதும் அவர்கள் தான் உங்களுக்கும் தெரியும் கூட்டு ஒப்பந்தத்தில் 300 நாள் வேலை வழங்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது ஆனால் எத்தனை நாள் வேலை வழங்குகிறார்கள் 200, 250 நாட்கள் தான் இதையே கூட்டு ஒப்பந்தம் இல்லை என்றால் வெளிப்படையாக பன்னுவார்கள்.

சிலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள் உட்கார்ந்து பேசிதான் ஆயிரம் ரூபாவினை பெற வேண்டும் என்று ஆனால் சில விடயங்களை பேசி தீர்க்க வேண்டும் சில விடயங்களை கையை முறுக்கி தான் கேட்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.