உள்நாட்டு செய்தி
போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்யுமாறு காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரி,பெண்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டன ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்களும் பாடசாலை மாணவர்களும் பதாதைகளை ஏந்தியவாறு,பிரதான வீதி ஊடாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கு பொலிஸாரிடம் மகஜர்களையும் கையளித்தனர்.பிரதேசத்தில் பாரிய அளவில் நடைபெறுகின்ற போதைப்பொருள் வியாபாரத்தை தடுத்து நிறுத்தி போதைப்பொருள் விற்பவர்களை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தியே இப்பாரிய ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பு அதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ ரஹீமிடம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்ளுகான மகஜர்களையும் கையளித்தனர்.காத்தான்குடி அனர்த்த குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கே.எல்.எம் பரீதியின் தலைமையில் குறித்த ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றமையையும் சுட்டிக்காட்டத்தக்கது.