உள்நாட்டு செய்தி
போதைக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் இவ்வாறான போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதப்படவுள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சகல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா போதைப்பொருள் அருந்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
கஞ்சா அருந்தி கைதுசெய்யப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக இடமாற்றம் வழங்கப்படவுள்ளதுடன், ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பொலிஸ் சேவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இவ்வாறான குற்றச்செயல்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் அதிகாரிகளில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பிடிபடுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராணுவத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் இராணுவ பொலிஸ் படையைச் சேர்ந்த ஒரு சிப்பாய் ஐஸ் பேதைப்பொருள் குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்திருந்தார்.