உள்நாட்டு செய்தி
X-Press Pearl வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றுக்கு மாற்ற காப்புறுதி நிறுவனம் இணக்கம்
X-Press Pealr நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு காப்புறுதி நிறுவனம் இணங்கியுள்ளது.
X-Press Pealr கப்பல் விபத்தினால் நாட்டின் கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்டஈட்டை செலுத்துமாறு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில், காப்புறுதி நிறுவனம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு சிங்கப்பூரில் எதிர்வரும் 06 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவதன் மூலம் நாட்டின் கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு உரிய நஷ்டஈட்டை எவ்வித இடையூறும் இன்றி பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நஷ்டஈட்டு வழக்கு தொடர்பான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பிரதிநிதிகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் சிங்கப்பூருக்கு பயணிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நிரல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் 09 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.