உள்நாட்டு செய்தி
மலையகம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் ஆய்வு
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகள் இன்று உயர்நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஸ்கா டி சில்வா இதனைத் தெரிவித்தார்.தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி, மனுதாரரான ஜீவரத்தினம் சுரேஸ்குமார் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் மற்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை.தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதே நடைமுறையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே தாம் உட்பட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள், மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.