உலகம்
சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர் – டெல்லி விவசாயிகள், நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் விவசாயி ஒருவர் பலியானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளதாக விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது…
“இன்றைய பேரணியில் விரும்பத்தகாத மற்றும் ஏற்று கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து கொள்கிறோம். இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபடவில்லை. அமைதியாக பேரணியை நடத்திச் செல்ல அனைத்து வித முயற்சிகள் எடுத்தபோதிலும், சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி சென்றுள்ளனர். அவர்கள் கண்டனத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சில சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர். இதனை தவிர்த்து, இது அமைதியாக நடந்த பேரணியாகும். அமைதியே எப்பொழுதும் நம்முடைய பெரிய பலம். எந்தவித வன்முறையும் நமது இயக்கத்திற்கு தீங்கு ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இதேவேளை விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
டெல்லி பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 83 பொலிஸார் காயமடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.