உள்நாட்டு செய்தி
புத்தாண்டை முன்னிட்டு விசேட பயணிகள் சேவை…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று (07) முதல் விசேட பயணிகள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களுக்கு இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.
7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேலதிகமாக 150 பஸ் சேவைகளும், 11, 12, 13 ஆகிய தினங்களில் 250 முதல் 300 வரையான மேலதிக பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
புது வருடத்திற்கு பின்னர் கொழும்பிற்கு திரும்பும் பயணிகளுக்காக, பிரதான டிப்போக்களின் ஊடாக பிரதான பஸ் நிலையங்களில் இருந்து பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பயணிகளின் தேவை கருதி 300 வரையான தனியார் பஸ் சேவைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா கூறினார்.
இன்று முதல் 15 ஆம் திகதி வரையில் கொழும்பிலிருந்து வௌி மாவட்டங்களுக்கும், 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வௌி மாவட்டங்களில் இருந்து மீண்டும் கொழும்பிற்கும் இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.