உள்நாட்டு செய்தி
கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டத்தை 2024 முற்பகுதிக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்ப்பு – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
தற்போதைய நிலைவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னரே மேற்படி அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன், கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கரவெட்டி, கொடிகாமம் மற்றும் புத்தூர் என பல பிரதேசங்களுக்கு இந்த திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.